சேதுபாவாசத்திரம் அங்காடி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் திறப்புவிழா நடைபெற்று செயல்படாத அங்காடி கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர். சேதுபாவாசத்திரம் அங்காடியில் கழுமங்குடா துறையூர், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000 குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள் வாங்கி வந்தனர். துறையூர் மற்றும் கழுமங்குடா பகுதியை சேர்ந்த 350 குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு பகுதி நேர அங்காடி தொடங்கப்பட்டதால், சேதுபாவாசத்திரத்தில் பழைய கட்டிடத்திற்கு அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 9. 16 லட்சத்தில் பொதுவிநியோக கட்டிடம் கட்டப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார். திறந்து வைக்கப்பட்டு மாதங்களான நிலையில் புதிய கட்டிடத்தில் செயல்படாமல் அங்காடி பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டுவருகிறது. மழைக்காலமாக இருப்பதால் பழைய கட்டிடத்தில் வைக்கும் பொருட்கள் சேதமடையும் நிலை உள்ளதால் புதிய கட்டிடத்தில் அங்காடியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.