தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம், குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வைக் கண்டித்தும், சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் நடமாட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் தழுவிய மனிதச் சங்கிலி போராட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. பேராவூரணியில் அண்ணா சிலை தொடங்கி பெரியார் சிலை வரை நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு, முன்னாள் எம்எல்ஏவும், மாநில விவசாய அணி இணைச் செயலாளருமான மா. கோவிந்தராசு, மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள்
எம்எல்ஏவுமான எஸ். வி. திருஞானசம்பந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அதிமுக நகரச் செயலாளர் எம். எஸ். நீலகண்டன் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் உ. துரைமாணிக்கம், கோவி. இளங்கோ, கே. எஸ். அருணாச்சலம், ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக, வார்டு கழக, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.