பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு கூப்புளிக்காடு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருக்கும் நிலையில், பக்கத்தில் உள்ள வேறொரு பகுதிக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்தது. எனவே தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள், பேரூராட்சி கவுன்சிலர் முகிலன் தலைமையில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியில் விரைவில் ரேஷன் கடை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து இப்பகுதிக்கு புதிய பகுதி நேர அங்காடியை பெற்றுத் தந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இப்பகுதி பொதுமக்கள் தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பழைய பேராவூரணியில் இருந்து கூப்புளிக்காடு பகுதி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதனை தொடர்ந்து புதிய பகுதிநேர ரேஷன் கடையை சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பேரூராட்சி கவுன்சிலர் முகிலன், அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில், ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.