பேராவூரணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
நாமக்கல் மாவட்டம் நரவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமன், அப்பகுதியில் திருட்டுத்தனமாக மரம் வெட்டியதை தடுக்கச் சென்றபோது சமூகவிரோதிகளால் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தாக்கப்பட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர், எஸ். பி, தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் அக்டோபர் 13ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்படுவார் என உறுதியளிக்கப்பட்டும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். நிறைவாக, கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாவட்ட துணைத்தலைவர் அருண் பிரகாஷ் நன்றி கூறினார்.

வட்டப் பொருளாளர் கார்த்திக், கோட்டப் பொறுப்பாளர் இளையபாரதி மற்றும் 10 பெண்கள் உள்ளிட்ட 30 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி