
அதிராம்பட்டினம் உப்பள வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
அதிராம்பட்டினத்தில் உப்பளவாய்க்காலில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிராம்பட்டினம் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் நீர்நிலைகள், சாக்கடைக் கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவு பொருட்கள் மிதப்பதுடன், அடைப்பும் ஏற்படுகிறது. அதிராம்பட்டினம் பகுதியில் கடற்கரை ஓரங்களில் உப்பு உற்பத்தி செய்யும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவில் கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் வரும் கடல் நீர் மாசுபடுகிறது. அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டுக்கு உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் பல்வேறு கண்டங்களில் இருந்து பறவைகள் வான்வழியே பறந்து வருகின்றன. இவை கண்டம் விட்டு கண்டம் பறக்கும் போது கடல் வழியைக் கடந்து வருகிறது. அப்போது பறவைகள் கடல் உணவுகளை எடுத்துக் கொள்கின்றன. இந்த நிகழ்வே தற்போது பறவைகளுக்கு நஞ்சாக மாறியுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.