தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆந்திர அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு 6000 முதல் 15 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்குவதை போன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாற்றுத்திறனாளிகள் பெரியகோட்டை விஜயசங்கரன் மற்றும் கன்னியாகுறிச்சி மாரிமுத்து ஆகிய இருவரும் போராட்டத்தின் போது மயங்கி கீழே விழுந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை உடனடியாக மீட்டு மயக்கம் அடைந்த முதியவர்களை ஆசுவாசப்படுத்தினர்.
பின்னர் அவர்கள் பசியால் மயங்கியது தெரிய வந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் காவலர்களை அனுப்பி மயங்கி விழுந்த முதியவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தனர். மேலும் இரு முதியவர்களையும் அவசர ஊர்தி வரவழைத்து அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.