மல்லிப்பட்டினம்: மீனவர் வலையில் சிக்கிய கடற்பசு மீண்டும் கடலில் விடப்பட்டது

67பார்த்தது
மல்லிப்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவருக்கு சொந்தமான படகில் ஞாயிறு அதிகாலை கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் 10 மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது படகில் அரிய வகை கடற்பசு ஒன்று சிக்கியது. இதையடுத்து மீனவர்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். 

பின்னர் அவர்களின் அறிவுறுத்தலின்படி அந்த கடற்பசுவை பத்திரமாக வலையிலிருந்து மீட்டு, மீண்டும் கடலில் விட்டனர். இதுகுறித்து, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ. எஸ். சந்திரசேகரன் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரை பகுதியில் அரிய வகை கடற்பசுக்கள் உள்ளதால், இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மீனவர் வலையில் 5 அடி நீளம் 400 கிலோ எடை கொண்ட பெண் கடற்பசு சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர். 

பின்னர் நாங்கள் வழங்கிய அறிவுரையின்படி, மீனவர்கள் கடற்பசுவை பத்திரமாக மீட்டு, கடலில் விட்டனர். இதையடுத்து மீனவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மீனவர்களுக்கு விரைவில் வனத்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். கடந்த 3 நாட்களில் மனோரா, மந்திரிப்பட்டினம், வெளிவயல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் வலையில் சிக்கிய ஆமைகள் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி