பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மட்டும் 5 இடங்களில் தொடர் திருட்டு, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு மட்டும் ஐந்து இடங்களில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பழக்கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்து ரூபாய் 3000த்தையும், அதனை தொடர்ந்து கொண்டிகுளம் பகுதியில் இருந்த ஒரு அரிசி கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூபாய் 20, 000த்தையும், உதயசூரியபுரத்தில் அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்து மொபைல் போன்கள், டேப் ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் வீட்டில் பணமோ நகையோ எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த அடுத்தடுத்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு ஏஎஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தொடர் திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.