தஞ்சையில் புரோக்கர்கள் அதிகரிப்பு நிலம் வாங்குவோர் பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் நில உரிமையாளர்களிடம் நில புரோக்கர்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சை, வல்லம், செங்கிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில புரோக்கர்கள் தொல்லை தாங்க முடியாமல் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். அதாவது வெளியூர்காரர்கள் எவரேனும் மனையை வாங்கி அப்படியே சில ஆண்டுகள் போட்டுவிட்டால் அங்கு உள்ளூர் நில புரோக்கர்கள் கொட்டகைகளை போட்டோ, வேறு விதத்திலோ ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக வேதனை தெரி விக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் நிலத்தின் மதிப்பு உயர்ந்து காணப்படுவதற்கு காரணமே நில புரோக்கர்கள்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். ஏழை, எளிய மக்கள் ஒரு மனை வாங்கி வீடு கட்டலாம் என்று எண்ணினால் நில உரிமையாளர்களிடம் புரோக்கர்கள் அணுகி விலைகளி கூட்டி விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் மனை வாங்குவது என்பது வெறும் கனவாகி போய்விட்டது. தஞ்சை மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு மதிப்பை விட கூடுதலான விலைக்குதான் நிலம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தஞ்சை மாவட்டத்தில் நில புரோக்கர்களுக்கு அரசு முறையான கடிவாளம் போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.