சிவகங்கை: 350 மெட்ரிக் டன் யூரியா உரம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்
சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மு. லெட்சுமிபிரபா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1. 5 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது, பயிா்கள் உரமிடும் நிலையை எட்டியது. விவசாயிகள் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யும் பயிா்களுக்கு தேவைப்படும் யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ரயில் மூலம் 20 தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 350 மெட்ரிக் டன் யூரியா உரம் வரவழைக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் யூரியா 4, 020 மெட்ரிக் டன், டிஏபி 1, 192 மெட்ரிக் டன், பொட்டாஷ் 484 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 2, 618 மெட்ரிக் டன் அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும், கடன் பெறாத விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்கிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும். விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்குரிய அடங்கல், ஆதாா் அட்டையை எடுத்துச் சென்று ரசீது போட்டு உரங்களை வாங்கிக் கொள்ளலாம் என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.