நாவலூரில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாவலூர் மேற்குகாடு பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் கவிதா தம்பதியர். கவிதா தனது கணவருடன் இன்று (நவம்பர் 6) அதிகாலை கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில் கவிதாவின் தாய் காந்தியம்மாள் தனது மகள் கவிதாவின் வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது கேஸ் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு திடீரென கேஸ் சிலிண்டரில் தீ பற்றியது. சுதாரித்துக்கொண்ட காந்தியம்மாள் அவரது பேரன் ஆகிய இருவரும் வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். எரிந்த கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்து முழுவதும் எரிந்துகொண்டிருந்த நிலையில் மேலும் வீட்டில் இருந்த மற்றொரு கேஸ் சிலிண்டரும் வெடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இந்த நிலையில் அங்கு அருகில் இருந்த தமிழ்ச்செல்வன் (40) சிரஞ்சீவி (67) சக்திவேல் (45) ஆகிய மூன்று பேரும் தீ அணைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூன்று பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.