கீழத்தூவலில் ஐவர் தினம்: வீர வணக்கம் செலுத்திய பொதுமக்கள்
முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் கடந்த 1957 ஆம் ஆண்டு காவல்துறையினரால் துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று (செப்.,14) ஐவர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள கீழத்தூவல் கிராமத்தில் ஐவர் தின நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. கீழத்தூவலில் கடந்த 1957 ஆம் ஆண்டு காவல்துறையினரால் துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூணுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பின் பொதுச்செயலாளர் கே. ஏ. பாண்டிதுரை தலைமை தாங்கினார். ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் மருத்துவர் ராம்குமார், திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் லெட்சுமி முத்துராமலிங்கம், ஊராட்சி தலைவி சாத்தாகி திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழத்தூவல் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்குமாலை அணிவித்து மேளதாளம், வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்த பொதுமக்கள் ஐவர் நினைவு தூணில் பாலாபிஷேகம் செய்தனர்.