பராமரிக்காமல் வீணடிக்கப்படும் மரபணுப் பூங்கா; பொதுமக்கள் கோரிக்கை

57பார்த்தது
ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி  செல்லும் கிழக்கு கடற்கரை  சாலையில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் திருப்புல்லாணிக்கு முன்பாக அச்சப்பிரம்பு பகுதியில் இடதுபுறம் சுமார் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அதில் 10 ஏக்கரில் ரூ. 7. 35 கோடி செலவில் இப்பூங்கா அமைந்துள்ளது.

பூங்காவில் காட்டு ரோஜா உள்ளிட்ட அரிய மலர்கள், கூந்தல் பனை உள்ளிட்ட தமிழக பாரம்பரிய மரங்கள், கற்றாழை உள்ளிட்ட வறட்சிப் பகுதி தாவரங்கள், பாலை நிலத்தை நினைவூட்டும் மணல் மேடுகள், ஓலையால் ஆன குடில்கள், குகை கட்டடம், யானை, மான்  போன்ற விலங்கின சிலைகள், சிறுவர்கள் விளையாடும் பகுதி ஆகியவை அமைக்கப்பட்டன.

ஆனால், இந்த பூங்காவை தற்போதைய ஆட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இப்பூங்கா முன்புறம் பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகின்றன. நுழைவு வாயில் அருகே உள்ள யானை சிலை, பாதையோர மின் அலங்கார விளக்குகள் சேதமடைந்துள்ளன. மணல் மேடுகள் புதர் மேடுகளாகிவிட்டன. சிறிய மழை பெய்தால் கூட சிறுவர் விளையாட்டு பகுதியின் அருகே நடைபாதை உள்ளிட்ட அனைத்திலும் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பூங்காவை புதுப்பிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி