ராமநாதபுரம் மாவட்டம் சின்னாண்டிவலசை மற்றும் தோரையன் வலசை பகுதியில் சாலையோரங்களில் உள்ள பட்டா நிலங்களில், சுமார் 30 ஆண்டுகளை கடந்த பனை மரங்களை மர்ம நபர்கள் சிலர் ராட்சத அரிவாள், மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் வெட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்ற இயற்கை ஆர்வலர்கள் இது குறித்து கீழக்கரை வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து, வண்ணாங்குண்டு கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அதிகாரிகள் வருவதை அறிந்த பனை மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பான விசாரணையில் வெட்டி சாய்த்த பனை மரங்கள் தோரையன்வலசையைச் சேர்ந்த முனியன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இது குறித்து வருவாய் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.