
வாடிப்பட்டி: பள்ளியில் ஆசிரியை, காவலாளியை தாக்கியவர் கைது
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள எல். புதூரைச் சேர்ந்த சுந்தரபாண்டியின் மனைவி அமுதா(58) என்பவர் வாடிப்பட்டி அருகேயுள்ள டி. மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மார்ச். 1) பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தபோது பள்ளி வளாகத்துக்குள், வாடிப்பட்டி அருகேயுள்ள கரடிக்கல்லைச் சேர்ந்த கருப்பசாமி (37) என்பவர் அத்துமீறி நுழைந்தார். இதனை ஆசிரியை அமுதா தடுத்தபோது ஆத்திரமடைந்து ஆசிரியை அமுதாவை தரக்குறைவாகப் பேசித் தாக்கியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற பள்ளிக் காவலாளி அழகுமலையையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.