தனியார் வங்கி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
குமரி மாவட்டம் மயிலாடி மார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகள் மகேஸ்வரி (21). பிஏ பட்டதாரி, இவர் கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். நேற்று (செப்.27) அவர் வேலைக்கு செல்லவில்லை. மதியம் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி படுக்கையறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து தாயார் அறை கதவை தட்டியபோது, உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவு உடைத்து பார்த்தபோது, மகேஸ்வரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று (28-ம் தேதி) நடந்தது. மகேஸ்வரி தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.