தக்கலை அருகே அழகிய மண்டபம் பகுதி வழியாக கேரளா நோக்கி இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியது. மேலும் சாலை ஓரம் நின்ற இரண்டு மின்கம்பங்களில் அடுத்தடுத்து மோதியது. மோதி வேகத்தில் கம்பங்களில் இருந்து கம்பிகள் அறுந்து லாரியை சுற்றிக் கொண்டன.
இதனால் லாரி தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் தடைப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்த தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மின்கம்பியில் சிக்கியிருந்த லாரியை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக தக்கலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.