கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட அரசகுளம் 4-ம் வார்டு பகுதியில் செல்லக்கூடிய கால்வாய் நடைபாதை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
இந்த நடைபாதையானது கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓகி புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நடைபாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் கீழ்குளம் ஆனான்விளை பகுதியில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி செல்லக்கூடிய பள்ளி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் செல்ல முடியாமலும், மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக பலமுறை பொதுப்பணித் துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்தியும் விடிவு ஏற்படவில்லை.
இந்த நிலையில் கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் முயற்சியால் ஊர் பொதுமக்கள் உதவியுடன் இன்று (14-ம் தேதி) 40 அடி நீளம் கொண்ட தென்னை மரத்தினை பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அரசகுளம் கால்வாயில் அமைத்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கான வழிபாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் பணி தொடங்கியது. இதற்காக அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.