காஞ்சிபுரம்: பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி கள பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வி துறையின் கீழ் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கள பயிற்சி மற்றும் தொழிற்சாலை பார்வைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தொழிற்கல்வி கள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, டாக்டர் பி. எஸ். சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள தொழிற்கல்வி பிரிவில் பயிலும் 17 மாணவர்களுக்கு ஏனாத்தூரில் உள்ள அக்ஷயா பிரிஸிசன் டூல்ஸ் தொழிற்சாலையில் 10 நாட்களுக்கான கள பயிற்சி நேற்று துவங்கியது. இப்பயிற்சியை மாவட்ட உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், தொழிற்கல்வி ஆசிரியர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். தொழிற்சாலை பொறுப்பாளர் மணிகண்டன், மேற்பார்வையாளர் செல்வராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு கள பயிற்சி அளித்தனர்.