வல்லிபுரம் ஊராட்சியில் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்து, மக்கள் மத்தியில் பொய்யான தகவலை பரப்பி வரும் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் ஊராட்சியில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் சார்பில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பை தரம் பிரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன், அரசு நிலத்தில் 5 சென்ட் இடத்தில் பணி தொடங்கிய நிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார் என்பவர், அத்திட்டத்தை செயல்படவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. திட்டத்தின் மீது அதிருப்தி தெரிவித்து, வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, ரவிக்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று சென்னை ஐஐடி சார்பில் வந்த அலுவலர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனிடையே, வல்லிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா அமுல் பார்த்தசாரதி, கிராம மக்களுடன் சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். வல்லிபுரம் ஊராட்சியில் எந்த நலத்திட்டங்களை கொண்டுவந்தாலும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக தெரிவித்தார்.