லண்டனில் உள்ள ஸ்கந்தர் சிலையும் மீட்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
தமிழக சிலைகளின் படங்கள் குறித்து, இணையதளங்களை ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இச்சிலையின் மதிப்பு 8 கோடி ரூபாய். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிலை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை, அமெரிக்கா மியூசியம் அதிகாரிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அளித்துள்ளனர். அதன்படி, சிலையை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர். அதேசமயம், ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்டு, லண்டன் மியூசியத்தில் இருப்பதாக கூறப்படும் ஸ்கந்தர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்க வேண்டும் என, காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தற்போது அருள்பாலிக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் உள்ளது. அதில் உள்ள ஸ்கந்தர் சிலை, 1993ம் ஆண்டு புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. சோமாஸ்கந்தர் சிலையிலிருந்து மாயமான ஸ்கந்தர் சிலை, லண்டனில் உள்ள தனியார் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.