செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக தேன்மொழி சுரேஷ் பணியாற்றி வருகிறார். கடம்பாடி ஊராட்சியில் உள்ள கோவில் எதிரே உள்ள குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக ஊராட்சி மன்ற தலைவர் மீது அப்பகுதி மக்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை சாலையை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். அப்போது எதிர் தரப்பினர் ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர் வைக்கும் நோக்கில் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று கூறி ஆக்கிரமிப்பு பகுதியில் ஒரு பகுதி அருகாமையில் உள்ள பள்ளி கட்டிட சுவர் வரை உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது மீறினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என எதிர் தரப்பினர் கூச்சலிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். அதனை தொடர்ந்து இன்று (செப்.,5) மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் என அனைவரும் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜை சந்தித்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மனுக்களை வழங்கினர்.