மாமல்லையில் 'நோ பார்க்கிங்' எச்சரிக்கை மீறுவோருக்கு அபராதம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்ட, 'நோ பார்க்கிங்' இடங்களில், போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை பலகை அமைத்து, மீறுவோருக்கு, குறைந்தது 1, 100 ரூபாய் அபராதம் விதிப்பதாக எச்சரித்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, சென்னை பகுதியினர், வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில், பயணியர் குவிகின்றனர். கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் படையெடுக்கும் நிலையில், பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இரண்டு புறமும், வாகனங்களை நிறுத்தி, பிற வாகனங்கள் செல்ல இயலாமல் போக்குவரத்து முடங்குகிறது. இதுகுறித்து, கடந்த மாதம் ஆய்வு செய்த சப் - கலெக்டர் நாராயணசர்மா, சாலை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்குமாறும், 'நோ பார்க்கிங்' இடங்களை கண்டறிந்து, எச்சரிக்கை பலகை அமைக்குமாறும், மாமல்லபுரம் போக்குவரத்து போலீசாரிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து, போக்குவரத்து போலீசார், கலங்கரைவிளக்க பாறைகுன்று அடிவாரம், கிருஷ்ண மண்டபம் சந்திப்பு, கோவளம் சாலை உள்ளிட்ட இடங்களில், வாகனம் நிறுத்த தடைவிதிப்பு பகுதிகளை கண்டறிந்து, 'நோ பார்க்கிங்' எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர். விதிகளை மீறினால், குறைந்தது 1, 100 ரூபாய் மற்றும் அதற்கும் மேலும் அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர்.