செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஊராட்சி மன்ற செயலர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆலப்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 500-வீட்டிற்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வீட்டிற்கு மட்டுமே அனுமதி வழங்கியதாக கணக்கு காட்டி உள்ளனர்.
மேலும் ஆலப்பாக்கம் ஊராட்சியில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக கூறி ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.