பழையசீவரம் சாலையோரம் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத் துறை சார்பில், செங்கல்பட்டு முதல், காஞ்சிபுரம் வரை சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக பழையசீவரம் சாலையில், பாலாற்றங்கரையொட்டி வெள்ள தடுப்பு சுவருடன் கூடிய பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையையொட்டி இருந்த பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பழையசீவரம் பாலாற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகள் ஏற்கனவே அகற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையையொட்டி உள்ள வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அங்கு முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்ய வேண்டும் என, பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழையசீவரம் பேருந்து நிறுத்தம் சாலையோரம், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களை, ஆக்கிரமித்து வீடு உள்ளிட்ட கட்டடங்கள் ஏற்படுத்தி பயன்பாட்டில் வைத்துள்ளவர்களுக்கு, அகற்றம் செய்வது குறித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளுக்கான இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடம் ஏற்பாடு செய்து கொண்டு, அங்கிருந்து காலி செய்வதாக சிலர் கால அவகாசம் கேட்டனர். அத்தகைய காலக்கெடுவும் முடிந்து விட்டதால் விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.