ஈரோடு: 3லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்
ஈரோடு மாவட்டத்தை மரங்கள் நிறைந்த பசுமையான பகுதியாக மாற்றும் முயற்சியில் ‘விதை சிறிது விடை பெரிது 3. 0’ என்ற பசுமை திட்டத்தை ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை, அனைத்து சமூக நல அறக்கட்டளைகள் மற்றும் சங்கங்களுடனும் இணைந்து செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா நத்தக்காடையூரில் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று, 2, 500 மரக்கன்றுகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கவர்னர் எஸ். சுரேஷ் பாபு, கல்லூரி தலைவர் என். ராமலிங்கம், பொருளாளர் சி. கே. பாலசுப்பிரமணியம், ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை தலைவர் எம். சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘விதை சிறிது விடை பெரிது 3. 0’ என்ற பசுமை திட்டத்தின் படி மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்று அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும், மேலும், நிலத்தில் மரக்கன்றுகள் வளர்க்க விரும்புவோருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும். இது தவிர மாவட்டமெங்கும் கூட்டுறவு சங்கங்கள், பால் கொள்முதல் நிலையங்கள் பஞ்சாயத்து அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலமாக மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும்.