ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஒரே நாளில் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. 40 அடி உயரம் உள்ள இந்த அணைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 275 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. கடந்த 11-ம் தேதி 385 கன அடியாகவும், 12-ம் தேதி 297 கன அடியாகவும், 13-ம் தேதி 328 கன அடியாகவும், 14-ம் தேதி 317 கன அடியாகவும் நீர் வரத்து இருந்தது.
சமீபத்தில் நீர் பிடிப்பு பகுதிகளான கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் (15-ம் தேதி) 465 கன அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில், நேற்று(அக்.16) காலை 6 மணி நிலவரப்படி ஒரத்துப்பாளையம் அணைக்கு 745 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்தது.
சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த 15 ஆண்டுகளாக ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்காமல் வெளியேற்றப்பட வேண்டும் என்பதால் அணையில் இருந்து தற்போது 513 கன அடி வீதம் படிப்படியாக நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரில் உப்புத்தன்மை குறைவாக இருப்பதாக பொதுப்பணித்துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.