புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் இளைஞர்களின் ஆதரவு திமுகவுக்கே தொடரும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஈரோடு மேட்டு கடையில் நடைபெற்ற திமுக தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார்.
அண்மை காலமாக திமுக நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்ற புகாருக்கு எதிராக நேற்று(செப்.11) நடைபெற்ற திமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசினார். அப்போது, பஞ்சாயத்து தலைவர்களே மக்கள் நலப் பணிகளை ஆற்ற மறுக்கும்போது, கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்காக இரண்டு நாட்கள் காத்திருந்து வாய்க்கால் உடைப்பை சரி செய்து விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்த மூத்த அமைச்சர் சு. முத்துசாமியின் செயல் மிகவும் போற்றுதலுக்குரியது.
புதிதாக யார் கட்சியை தொடங்கினாலும் திமுகவில் இருந்து இளைஞர்கள் யாரும் அங்கு செல்ல மாட்டார்கள். இளைஞர்களுக்கான தவப்புதல்வன் திட்டத்தால் இளைஞர்களும் மாணவர்களும் அதிக அளவில் பயன் பெறுகிறார்கள். அதேபோல கிராமப்புற பெண்கள் இலவச பஸ் பயணத்தால் பயனடைகிறார்கள். காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று தோப்பு வெங்கடாசலம் பேசினார்.