ஈரோடு: வரி பாக்கி... குடிநீர் இணைப்பை துண்டிக்க அறிவுறுத்தல்
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள், காலி இடங்களுக்கு சொத்து வரியும், குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் மாநகராட்சி குத்தகை இனங்களுக்கான அனுமதிப்பதற்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை பிரதான வரி வருவாயாகும். இந்த வரியினங்கள் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை முதல் தவணையிலும், அக்டோபர் முதல் மார்ச் வரை 2வது தவணையிலும் செலுத்த வேண்டும். தற்போது, வரி நிலுவை தொகைகளை வசூலிக்க மாநகராட்சி மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரி வசூலிப்பது தொடர்பான ஆலோசனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மனிஷ் தலைமையில் நடந்தது. வருவாய் பிரிவு உதவி ஆணையர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார். இதில், வரி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வசூலிக்கவும், நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு முதற்கட்டமாக குடிநீர் இணைப்புகள் துண்டிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜப்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக வரி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு மாநகராட்சி வாகனங்கள் ஒலி பெருக்கி மூலம் வாசகங்கள் ஒலிக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.