ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. எடப்பாடியால் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகியின் ஆதரவாளர், திட்டமிட்டு இந்தக் கூட்டத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவதாக செங்கோட்டையன் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதிமுக ஈரோடு புறநகர் மேற்குமாவட்ட நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எடப்பாடியால் சமீபத்தில் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் செங்கோட்டையன் பேசி முடிக்கும்போது அந்தியூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் என்பவர் எழுந்து அதிமுகவின் கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்றும் நிர்வாகிகள் எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை என சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நிர்வாகியை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் சமரசம் செய்ய முயற்சித்தார். அப்போது அங்கிருந்த சக நிர்வாகிகள் புகார் தெரிவித்த பிரவீனை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அவரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர். மேலும் நிர்வாகிகள் அவரை சரமாரியாக தாக்கினர். சில நிர்வாகிகள் நாற்காலிகளை தூக்கி அவரை தாக்கினர். இதனால் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. சில நிர்வாகிகள் பிரவினை மீட்டு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். 2011 இல் இருந்து ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளராக இருப்பதாகவும் அதிமுக கூட்டங்களுக்கு தனக்கு தகவல் கூட தெரிவிப்பதில்லை என கூறினார். இதற்கிடையே கூட்டத்திற்கு வெளியே இருந்த நிர்வாகிகளை கே எஸ் செங்கோட்டையன் மீண்டும் உள்ளே வருமாறு அழைத்து அமர வைத்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் பிரச்சனை செய்த நபர் கட்சியில் அடிப்படை உறுப்பினரே இல்லை என்றும் அந்தியூரை சேர்ந்த மாநில நிர்வாகி இ.எம்.ஆர் ராஜா பிரச்சனையை ஏற்படுத்துவதற்காகவே அவரை திட்டமிட்டு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு இ எம் ஆர் ராஜா தான் காரணம் என்றும் பொதுமக்களிடம் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என அவர் சொன்னதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார். அப்போது பேசிய தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். செங்கோட்டையனால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் EMR ராஜா சமீபத்தில் செங்கோட்டையன் பரிந்துரை இல்லாமலும் அவருக்கு தெரியாமலும் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியால் நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனத்திற்கு பிறகு தான் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்பொழுது அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இது பகிரங்கமாக வெடித்திருப்பது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே புதிய தலைமுறை கேமரா மேன் தகராறை படம் பிடித்த போது, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பிளாஸ்டிக் குப்பை தொட்டியை தூக்கி அடித்ததில் கேமரா உடைந்தது.