ஈரோடு: 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் சாலை மறியல்
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓராண்டு காலத்திற்கான தள்ளுபடி மானியத்தை நிபந்தனையின்றி முழுமையாக வழங்க வேண்டும். இந்நாள் வரை போனஸ் வழங்கப்படாத கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக திருத்தியமைக்கப்படாமல் உள்ள நெசவாளர்களின் அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும். நெசவாளர்களின் ஓய்வூதியத்தை 1200 ரூபாயிலிருந்து ரூ. 3000 ஆக உயர்த்த வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கைத்தறி ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பவானி ரோட்டில் உள்ள கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். ஆனால் தடையை மீறிப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் அருகே திரண்டு கண்டன கோஷம் எழுப்பினர். பின்னர் நெசவாளர்கள் ஊர்வலமாக வந்து உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த நெசவாளர்கள் பவானி ரோட்டில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.