அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் மற்றும் கோவிலூரைச் சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் கூலித் தொழிலாளர்கள் விராலிக்காட்டூர் பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம் பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் சென்றனர். அந்த சரக்கு வாகனம் எண்ணமங்கலம் - மூலக்கடை செல்லும் சாலையில் ஆலயங்கரட்டில் உள்ள குச்சிக்கிழங்கு மில் அருகே வந்த போது, திடீரென சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தென்னை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 19 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு வைத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 15க்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளிகள் படுகாயமடைந்ததை அறிந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.