பர்கூர் மலைப்பகுதி சாலையில் மண்சரிவை தடுக்க தடுப்புச்சுவர்
பர்கூர் மலைப்பகுதி சாலையில் மண்சரிவை தடுக்க தடுப்புச்சுவர் தொடர் மழையின் காரணமாக பவானி உட்கோட்டத்தில் அமைந்துள்ளதும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் மாவட்ட முக்கிய சாலையுமான செல்லம்பாளையம் - பர்கூர் - கொள்ளேகால் சாலையில் மண் சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அச்சாலையினை பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறையினர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் போக்குவரத்து தடையின்றி செல்ல வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த நிலையில், திருப்பூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் சாலையை ஆய்வு செய்து மண் சரிவை தடுக்க உடனடியாக தடுப்புச்சுவர் கட்டும் பணிகளை துவக்க உத்தரவிட்டார். மேலும், அவ்வப்போது ஏற்படும் மண் சரிவுகள் மற்றும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி போக்குவரத்து தடையின்றி செல்ல வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிர சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பவானி உதவி கோட்டப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.