திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு சங்க செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் வேல்முருகன் தலைமையில் காளை வளர்ப்போர் 20க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளை அதிகம் பங்கேற்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் காளைகள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. வாடிவாசலில் காளைகள் அவிழ்ப்பதற்கான அனுமதி சீட்டு அதிக பணம் கொடுத்து வாங்கப்படுவதால், ஆன்லைனில் பதிவு செய்தும் டோக்கன் கிடைப்பதில்லை. திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜல்லிக்கட்டுகளில், காளை உரிமையாளர்கள், விவசாயிகள் தங்களுடைய காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க முடியாத நிலை உள்ளது.
ஆன்லைன் டோக்கன் முறையில் நெறிமுறை படுத்த வேண்டும். அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இல்லை. ஜல்லிக்கட்டில் விழா கமிட்டியுடன் அரசு துறை சார்ந்த மேற்பார்வையாளர் ஒருவர் பங்கேற்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தின் நடைபெறும் ஜல்லிக்கட்டில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு முன்னுரிமை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.