கோவை, அவிநாசி சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கண்டெய்னர் லாரி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லாரியின் பின்பக்கம் உள்ள கண்டெய்னர் கதவில் இருந்து புகை வந்ததை கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், லாரி ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக லாரியை நிறுத்தி ஓட்டுநர் பார்த்தபோது, கண்டெய்னரில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், கண்டெய்னரில் இருந்த கோழியை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் ட்ரம்ப்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.