கோவை மாவட்டம் சூலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை மையம் ஊழியர் பற்றாக்குறையால் திடீரென மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சூலூர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ - சேவை மையத்துடன் ஆதார் சேவை மையமும் செயல்பட்டு வந்தது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் ஆதார் தொடர்பான சேவைகளைப் பெற வந்து சென்றனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல், எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்த மையம் மூடப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சூலூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆதார் சேவைக்காக நாங்கள் இந்த மையத்தை தான் நம்பியிருந்தோம். ஆனால், திடீரென மையம் மூடப்பட்டதால், நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம் என்று தெரிவித்தனர். ஆதார் சேவை மையம் மூடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விரைவாக புதிய ஊழியரை நியமித்து, ஆதார் சேவை மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.