கோவையில் போதைக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த மருந்துக்கடை உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரத்தினபுரி போலீசார் சாஸ்திரி நகர் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கோவை கணபதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 33), திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ராசியப்பன்(33) என்பது தெரியவந்தது. இதில், பல்லடத்தில் மருந்துக்கடை நடத்தி வரும் ராசியப்பனிடம், வெங்கடேஷ் போதை மாத்திரைகள் கேட்டதும், அதை அவர் இங்கு கொண்டு வந்து கொடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர்.