கேரள மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் கள் கடைகளைத் திறக்க வேண்டும் என்றும், அதனை அரசு முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கள் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி ஜெயலலிதா கூறியதை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் கள்ளுக்கடைகளைத் திறந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையை அடுத்த பல்லடத்தில் வருகிற 24-ம் தேதி கள் விடுதலை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய கள் போராளிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நமது பாரம்பரிய வரலாற்று உணவு பானமான கள் அருந்துவதை, விற்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது.
இயற்கையாக கிடைக்கும் பானங்களில் கள்ளில் மட்டுமே புரதச்சத்து, பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. தமிழகத்தின் தற்சார்பு பொருளாதாரத்திற்கு கள் மிகவும் அவசியம் என்று கூறினார். மேலும், கள் என்பது உணவுப் பொருள். அதனை மது எனக்கூறி அரசு தடை செய்துள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் கள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.