கணுவாய்: சிறுத்தை தென்பட்டதால் பொதுமக்கள் அச்சம்
கோவை கணுவாய் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் சிறுத்தை தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான தடாகம், மாங்கரை, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுமாடுகள், காட்டுபன்றிகள், மான்கள் என பல்வேறு காட்டு விலங்குகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்படுகிறது. இன்று தடாகம் சாலை கணுவாய் அருகே திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு பாறையின் மீது சிறுத்தை ஒன்று இருந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். தற்போழுது அவை வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதியில் இருந்து சிறிது தூரத்திலேயே உள்ள மலையில் சிறுத்தை தென்பட்டுள்ளதால் ஊருக்குள் வருவதற்கு முன்பு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் இந்த பகுதி Reserve Forest க்குள் இருப்பதால் சிறுத்தை இருப்பது இயல்பு எனவும் வனத்துறை தொடர்ந்து சிறுத்தை உள்ளிட்ட காட்டு விலங்குகளை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.