மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கேத்தி, கூடலுார் என பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ. 2, 000திற்கும் குறைவாக விற்பனை ஆனது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்து, விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து, கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரி நேற்று கூறுகையில், ஊட்டி உருளைக்கிழங்குகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் நேற்று ஊட்டி கிழங்குகள் அதிகபட்சமாக ரூ. 2, 850க்கு விற்பனை ஆனது. சுமார் 750 மூட்டைகள் லோடு வந்ததாகவும், வந்ததும் மூட்டைகள் அனைத்தும், விற்று தீர்ந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.