கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி குளம் வடகிழக்கு பருவமழையால் நிரம்பி வழிகிறது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மிகப் பெரிய குளம் காரமடையின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த குளத்தை நம்பி சுமார் 5, 000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நிலத்தடி நீர் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த காலங்களில் தண்ணீர் இன்றி பாதி அளவுக்கு மட்டுமே இருந்த இந்த குளம், நேற்று இரவு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஒரே நாளில் முழுவதும் நிரம்பியுள்ளது. காரமடை மட்டுமின்றி பெரியநாயக்கன்பாளையம், கோவனூர், கட்டாஞ்சி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து பெள்ளாதி குளம் முழுவதுமாக நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலேயே பெள்ளாதி குளம் நிரம்பி வழிவதால் அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.