பாலாஜி நகர்: ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்!

77பார்த்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்காவில் பலத்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சிறுவர்கள் ஆபத்தான முறையில் விளையாடி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையம் நகராட்சியின் இரண்டாவது வார்டில் உள்ள சங்கர் நகர் அருகே பாலாஜி நகர் பகுதியில், சுமார் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாலாஜி நகர் பூங்காவில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பூங்காவில் தேங்கியுள்ள தண்ணீரில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குதித்து நீச்சல் அடித்து விளையாடி வருகின்றனர். மேலும் சிலர் விளையாட்டு உபகரணங்கள் மீது ஏறி தண்ணீரில் குதிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பூங்காவில் உரிய வடிகால் வசதி இல்லாததால், தேங்கியுள்ள தண்ணீர் எப்போது வெளியேறும் என்பது தெரியவில்லை. மேலும் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி