கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள லிங்காபுரம் கிராமத்தில் நேற்று இரவு காட்டு யானை சாலையில் நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மலையடிவார கிராமமான லிங்காபுரத்தில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று இரவு, சிறுமுகை-லிங்காபுரம் சாலையில் உள்ள மூக்கு வளைவு பகுதியில் பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை நடமாடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள், அவ்வழியே வரும் வாகனங்களை எச்சரித்தனர். யானையின் நடமாட்டம் குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். யானையை விரட்டும் வாகனத்தின் மூலம் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இதனால் காட்டு யானை சாலையில் இருந்து நடந்து சென்று, மீண்டும் வனப்பகுதிக்குள் மறைந்தது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் கிராமத்திற்கு அருகே நடமாடுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.