மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக நடமாடி வருகிறது. முன்னர் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர், நெல்லித்துறை, தாசம்பாளையம் போன்ற கிராமங்களில் அதிகம் நடமாடிய இந்த யானை, அண்மைக்காலமாக சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7: 00 மணியளவில் காட்டு யானை பாகுபலி சிறுமுகை-லிங்கபுரம் சாலையில் லிங்கபுரம் கிராமத்தின் அருகே நடந்து வந்தது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டு யானை சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்த நிலையில், இது குறித்து உடனடியாக உள்ளூர் மக்களுக்கும், சிறுமுகை வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது வனத்துறையினர் மற்றும் லிங்காபுரம் ஊர் மக்கள் இணைந்து டார்ச் லைட்டுகளை அடித்து, சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை பாகுபலியை அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதற்கு முன்னதாக, காட்டு யானை பாகுபலி சாலையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டு சாலையின் நடுவே நின்றதால், அந்த வழியாக வந்த வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதுவனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.