கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில் இரவு நேரத்தில் இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள சாலையில் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லிங்காபுரம் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பொதுமக்களால் 'பாகுபலி' என்று அழைக்கப்படும் காட்டு யானையும், அதனுடன் மற்றொரு காட்டு யானையும் அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்புகள் நிறைந்த லிங்காபுரம் கிராமத்தின் அருகே வந்தன. வனத்தில் இருந்து வெளியேறிய இந்த இரண்டு காட்டு யானைகளும் ஊருக்குள் நுழையும் பிரதான சாலையான லிங்காபுரம்-சிறுமுகை சாலையில், லிங்காபுரம் கிராமத்தின் அருகே உள்ள புதர் பகுதியில் நின்றிருந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்தனர். மேலும், சிறுமுகை வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இந்த யானை இதுவரை பொதுமக்களை தாக்கவில்லை என்றாலும், அதனுடன் மற்றொரு யானை நின்றிருந்ததால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.