கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட காந்தவயல், லிங்காபுரம், உளியூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் இங்குள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்தின் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள்ளும் நுழைந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட காந்தவயல் கிராமத்தின் அருகே ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று வனத்தில் இருந்து வெளியேறி அருகில் இருக்கும் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் சாலையின் அருகே உள்ள வனத்துறை சோதனை சாவடிக்கு பின்புறமாக முகாமிட்டது. இதனைக் கண்ட விவசாயிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், வாகன ஓட்டிகளை எச்சரித்தனர். மேலும், காட்டு யானை நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளித்து, யானையின் அருகே யாரும் செல்லாதவாறு முதலில் தடுத்து நிறுத்தினர். பின்னர் வனத்துறையினர் காந்தவயல் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானையை விரட்டி அடித்து, வனப்பகுதிக்குள் செல்லுமாறு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.