கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், நகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக கவுன்சிலர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி மன்ற கூட்டத்தில், அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒரு அதிமுக கவுன்சிலர் டம்ளரை தூக்கி வீசியதால் பிரச்சனை உருவானது. இந்த சம்பவத்தில் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் மீதும் டம்ளர் விழும் அபாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கூட்டத்தை நடத்த விடாமல் தொந்தரவு செய்ததாக கூறி, நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வின், ஒழுங்கு நடவடிக்கையாக அடுத்த மூன்று கூட்டங்களில் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்க தடை விதித்தார். இதனை எதிர்த்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள அக்டோபர் மாத நகரமன்ற கூட்டத்திற்கு பாதுகாப்பு கருதியும், அதிமுக கவுன்சிலர்கள் உள்ளே வர முயன்றால் அவர்களை கைது செய்யும் நோக்கிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.