கறிக்கடையில் மர்ம நபர் பூட்டை உடைத்து கைவரிசை
திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் ரபிக் என்பவரின் கோழிக்கறி கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் விநாயகர் சதுர்த்தி தினத்தில் கடை விடுமுறை என்பதால் பூட்டி இருந்ததை நோட்டமிட்டு உள்ளே புகுந்துள்ளார். பணம் இருக்கும் என்ற நோக்கத்தில் கடைக்குள் இருந்த கத்தியை எடுத்து கல்லா பெட்டியை உடைத்து பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிலிருந்து சில்லரை பணம் 600 ரூபாயை எடுத்துக்கொண்டு அவர் எவ்வித அச்சமும் இன்றி சர்வசாதாரணமாக இரும்பு ராடுடன் வெளியேறும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. காலையில் கடை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் கடையின் உரிமையாளர் மற்றும் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வந்து விசாரணை செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்த போது ஒரு நபர் கையில் இரும்பு ராடு உடன் கோழிக்கறி கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது. காவல்துறையினரின் தொடர் ரோந்து இருந்தும் அவர்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில் இரும்பு ராடுடன் அதிகாலையில் சர்வ சாதாரணமாக வந்து கறிக்கடைக்குள் புகுந்து மர்ம நபர் திருடி செல்லும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.