மைலாப்பூர் - Mylapore

சென்னை: அமலாக்கத் துறை விசாரணை; செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

சென்னை: அமலாக்கத் துறை விசாரணை; செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர்.  இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

வீடியோஸ்


சென்னை