தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நடிகை கஸ்தூரி அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி. சி. ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவ. 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், திரைப்பட நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் போலீஸார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை, மதுரை, கோவை என மொத்தம் 6 புகார்கள் அவர் மீது உள்ளன. இவ்வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் நடிகை கஸ்தூரியின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.